Thursday, September 16, 2010

சுடரும் கணங்களைத் தவிர ஏதுமில்லை

அது வெறுமை கமழும்
சிலைஎன்றான் ஒரு உன்மத்தன்
அப்படித்தான் போலும்
சுயமழிந்த பிரதியை
வேறென்னவேன்பது
எப்போதும் கதவில்
வாழும்
உன் உயிர் .

Friday, June 18, 2010

உதிரும் காலம் முருகாய் மலரும்

வெம்மை கமழும்
கற்பாறை யாதொரு
சலனமற்று கரைந்து போகும்
வைகறையில் கேட்ட‌
ஆனைச்சாத்தன் இசையில்
எப்போதும் போல்
பங்குனியில்
மின்னலெனப் படரும்
மரங்கள்
அரும்பும் தளிர்களை
ஒளித்துவைப்பதில்லை.

குறிப்பு: ஆனைச்சாத்தன்‍‍ ‍‍‍‍: கரிக்குருவி
முருகு: அச்சுருத்தும் தெய்வம்.அணங்கு, சூர், சூர் அரமகளிர் போன்றன இப்படிப்பட்டவை.
முருகு பால் அடையாளமில்லாதெய்வம். கருப்பும் இப்படியே. இத்தெய்வங்கள் மலை உச்சிகளிலும் சுனைகளிலும், மரப் பொந்துகளிலும் வாழ்பவை. இவைகள் இளையோரைப் பிடித்துக் கொள்ளும். முருகு பிடித்தால் வெறியாட்டு நடத்துவர். இந்த முருகே,முருகு+அன்= முருகனாக மாறியது என்று ஆய்வாளர் சிலர் கூறுவர். இவை இயற்கைத் தெய்வங்கள்.மேலும் காண்க சங்கக் கவிதைகளில்..

Wednesday, June 16, 2010

கற்கோளுலகிலரும்பும் தைநீராடல்

எனது இருப்பற்றதன் துயரமும் கழிவிரக்கம் கோரும்
வெறுமையும் தவிர
மகிழ்வானது உனக்கு
எதுவுமிராதென்பதையறிவேனென்ற போதும்
சொல்கிறாய்
நீ யென்னுயிரென்று...
தூக்கனாங்குருவிகள் மனிதருக்கு
அகப்படாத கிளைகளில்தான்
கூடுகட்டுமென்பதையறிவன மரங்கள் மட்டுமல்ல..

Saturday, May 22, 2010

கல்மிதக்கும் ஆறு...

ஒன்றைமட்டும் சொல்கிறேன்
நீயொன்றும் புனிதனல்ல‌
நானொன்றும் யோக்கியனுமல்ல
அவர்களைப் பற்றி
மதிப்பீடு செய்ய.

Monday, May 17, 2010

அல் உலகு

மன நிலைபிறழ்ந்தவரிடமிருந்து
அன்பையும்
தொடர் அவமதிப்பிற்குப் பின்னும்
யாசகம் கேட்டு உண்டும் பசியடங்காது
ஒட்டுத்துணியின்றி மல்லாந்து
தன் அம்மாவுடன் உக்கிர வெயிலில்
எல்லாப் பிண‌க் கால்களும் செல்ல‌
நடைபாதையில் உயிர்ப்பாய் உறங்கும்
ஒரு பெண் குழந்தையிடமிருந்து
கனத்த ரவுத்திரத்தையும்
தாழ்வுமனத்தில் கனந்தோறும் பதறும்
ஒரு மண்வாசியிடமிருந்து
பெருங்காதலையும்
உயிர்கசியும் நேசத்தை
உன்கழிசடைத்தனம் மணக்க
உன்னால் இழிவுசெய்யப்படுகிற‌
மூன்றாம் பால் அன்பரிடமிருந்தும்
கனியும் தாய்மையை
உன்னால் குற்றவாளியெனச் சொல்லப்பட்டவரிடமிருந்தும்
பெற்றுத் தழைக்கும் அந்தக் கொடி
நிலத்தோடு படர்கிறது
அமுதம் தளும்பும் கடலென.

Wednesday, April 28, 2010

தமிழறிஞர் ஞானி... எனது ஆசான்..

கோவை ஞானி என எல்லோரும் அழைப்பர். ஞானி ஐயாவால் ஜெயமோகன் உள்ளிட்ட பலரும் ஆக்கம் பெற்றுள்ளனர்.
2001முதல் அறிவேன். அவரிடம் சென்றிராவிட்டால் குப்பையாய்த்தான் போயிருப்பேன் என்பதை அவரின்
ஆளுமையும் ஆக்கமும் கண்டு உணர்ந்தேன். மனித விடுதலை, உயிர் விடுதலை என்பதை மையமாகக்
கொண்டு இடையறாது இயங்கும் தமிழின் பேறு அவர். தமிழ் அடையாள அழிப்பு வேலைகளைச்
செய்துகொண்டு தமிழின் காவலராய் தடியெடுத்தவர்களெல்லாம் தண்டல் காரன்போல் தங்களை
அறிவித்துக் கொள்ளும் நிழல்களுக்கிடையே ஆரவாரம் இன்றி செயல்படும் தமிழ் இயக்கம் அவர். நூல்கள்
மணக்கும் சோலையாய் அவர் ஆய்வறை. நான்கற்றவை சொல்லி மாளாது....

ஞானியின் நூல்கள்:
1. இந்திய வாழ்கையும் மார்க்சியமும் (1976)
2. மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு (1979)
3. மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் (1978)
4. தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் ( 1994)
5. எண்பதுகளில் தமிழ் நாவல்கள் (1994)
6. படைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம் (1994)
7. கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை (1996)
8. தமிழில் நவீனத்துவம் பின் நவீனத்துவம் (1999) காவ்யா வெளியீடு , சென்னை
9. நானும் என் தமிழும் (1997)
10. தமிழன் வாழ்வும் வரலாறும் (1999)
11. தமிழில் படைப்பியக்க‌ம் (1999) காவ்யா வெளியீடு , சென்னை
12. மார்க்சியத்துக்கு அழிவில்லை (2001)
13. மறு வாசிப்பில் தமிழ் இலக்கியம் (2001) காவ்யா வெளியீடு , சென்னை
14. எதிர் எதிர் கோணங்களில் (2002) காவ்யா வெளியீடு , சென்னை
15. மார்க்சிய அழகியல் (2002) காவ்யா வெளியீடு , சென்னை
16. கவிதையிலிருந்து மெய்யியலுக்கு (2002)
17. தமிழ், தமிழர், தமிழ் இயக்கம் (2003)
18. தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் (2004)
19. வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் (2004) காவ்யா வெளியீடு , சென்னை
20. தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் (2004) காவ்யா வெளியீடு , சென்னை
21. தமிழன்பன் படைப்பும் பார்வையும் (2005)
22. நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் (2006) காவ்யா வெளியீடு , சென்னை
23. வள்ளுவரின் அறவியலும் அழகியலும் (2007)
24. தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் (2008) காவ்யா வெளியீடு , சென்னை
25. நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் (2009) அபுதாபி தமிழ்ச் சங்கம்

முதலாக 27க்கும் மேற்பட்டவை.
பெருந்தொகுப்புகள் :
1. மார்க்சியம் பெரியாரியம் (2006) காவ்யா வெளியீடு , சென்னை
2. தமிழியம் தமிழ்த்தேசியம் (2007) காவ்யா வெளியீடு , சென்னை
3. தமிழ்க்கவிதை (2007) காவ்யா வெளியீடு , சென்னை
4. தமிழ் நாவல் (2008) காவ்யா வெளியீடு , சென்னை

கவிதை நூல்கள்: 2; தொகுப்பு நூல்கள்: தமிழ்த்தேசியம் பேருரைகள் முதல் நிகழ்க் கட்டுரைகள் வரை
13க்கும் மேற்பட்டவை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டியை நடத்துகிறார்.
2009 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருதைப் பெறவுள்ளார்.
தமிழ் நேயம் இதழை மிகுந்த சிரமத்திற்கிடையிலும் கொண்டு வருகிறார். தமிழ் எவ்வளவு இடையூறுகள்
வரினும் தன்னைத் தக்கவத்துத் தழைத்துக் கொள்ளும் என்பதற்கு ஞானி ஐயா போன்றவர்களே சான்று.

இன்று சித்திரை நிறைநிலா நாள்... தொல்காப்பியரின் பிறந்த நாள் ...

நிலவின் பாலொளிய‌முது பருகாதார் துயருடையோர் தான் எனும் படி பொங்கும் பேரெழில்.
இன்றைய நாளை தொல்காப்பியரின் பிறந்த நாள் என தமிழறிஞர்கள் முடிவுசெய்து விழா எடுக்கின்றனர். நல் முயற்சி.
பொய்யர்களுக்கும் புராணக்கதை மாந்தர்களுக்கும் வீண் பிறந்த நாள் கொண்டாடும் சூழலில் உலக அறிஞர்கள்
என்றும் வியக்கும் படி தமிழ் இலக்கண ,இலக்கிய, சமூக, வாழ்வியல் வளத்தை வெளிப்படுத்திய் முதல்
அறிஞர் இவரே என மொழி நூலார் வியந்து கூறுவர். அவருக்கு பிறந்த நாள் காணும் செயல் மிகச்சிறப்பு.
தமிழ் தழைக்கும் வழி தொல்காப்பியரின் நெறியில் நல் ஆய்வுகள் தேவை.

Friday, April 23, 2010

அண்மையில் வாசித்த கீற்றுகளில் சில‌

1. சங்கக் கவிதைகள், நவீன கவிதைகள் புரியவில்லை என்கிற நண்பர்களுக்கு
...ஒரு நூலின் தன்மையை அறிதற்குரிய நன்முறை அந்நூலை நேரில் படித்தலேயாகும். இத்தகைய
கட்டுரைகளெல்லாம் நூல்களைப் படித்தற்கு உதவும் தோற்றுவாய்களேயாகும்.
இக்கட்டுரைகளையும், காப்பியங்களின் சாரமாக உரை நடையில் எழுதப்படும் சிறிய நூல்களையும்
படித்த மாத்திரத்தில் மூல நூல்களையே ஆராய்ந்து தேர்ந்துவிட்டதாக மயங்குதல் கூடாது.
எல்லாவற்றையும் எளிதாகவும் விரைவாகவும் அடைந்துவிடவேண்டுமென்ற விருப்பு இக்காலத்தில்
எங்கும் பரவி இருக்கின்றது . வானவூர்தியிலேறி அமர்ந்து மணிக்கு நூறு இரு நூறு கல் விரைவில்
பல்லாயிரங்கல்களுக்கப்பாலுள்ள வேறிடங்களுக்குச் செல்லலாம். இது விஞ்ஞானம் அளித்த நலன்.
ஆனால் வானவூர்தி வேகத்தில் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களையும் இருபத்து ஏழு இயல்களையும்
படித்து முடித்திட ஒல்லுமோ? நம் முன்னோர் எங்ஙனம் முயன்று முறையாக நூல்களைக் கற்றனரோ அங்ஙனமேதான்
நாமும் கற்றல் வேண்டும். ஆதலின் தமிழ்ப்பற்றுகொண்டு அதனைக் கற்கப் புகும் இளந்தமிழன்பர்கள் சிறிய
உரைநடை நூல்களையும் கட்டுரைகளையும் படித்தனராயின் அதன்பின்னர் முதல் நூல்களையும் அவற்றின்
உரைநடைகளோடு படித்தல் வேண்டும்.
...பத்துப் பாட்டுச் சொற்பொழிவுகள் (1952‍‍‍ ‍ கழகப் பதிப்பு ‍ நன்றி ) எனும் நூலில் மதுரைக் காஞ்சி எனும்
கட்டுரையிலிருந்து.. பக்கம் .௧௭௪
ஆசிரியர்: வித்துவான். ஆ. ஜெபரத்னம் , எம். ஏ.,

Sunday, April 18, 2010

அண்மையில் வாசித்தவை

கவிதையியல்( க.பூரணச்சந்திரன்)
தெலூஸ் கத்தாரி ( எம்.ஜி. சுரேஷ்)
லெக்கான் (எம்.ஜி. சுரேஷ்)
நம் தந்தையரைக் கொள்வதெப்படி ( மாலதி மைத்ரி )
நகுலன் கவிதைகள்

நகுலன் கவிதைகள் சில‌

தேடித்திரிந்ததைக் கண்டது
நாடி வந்தவனைக்
கண்டபின்தான்

நான்
எனக்கு
யாருமில்லை
நான் கூட..

இல்லாமல் இருப்பது

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்

Thursday, April 15, 2010

அசரீரி உரு

..மரணதினும் கொடிது
மரண வாழ்க்கை .
பறவையின் கோதலில்
கழன்று அந்தரத்தில் தவழும்
ஒரு இறகைப் போல
காலத்தில் கரைய எத்துனை நாள்
மலர்ந்துகொண்டிருப்பது .
கனிகளின் காலம் எப்போதும் அந்திதான்.
பித்தம் பூக்கும்
உதய நாழிகை
உப்புக்கடல்தான்

Sunday, March 28, 2010

வலியைப் பருகும் அன்னம்

கனவும் நனவும்
முயங்கிடும் பொழுதாய்
நிலாக்கடல் போதவிழும்

புளிப்பேறிய களாப் பழமுண்டவன்
பாடியதென்னவோ
வேனிற்காலத்தில்
அரும்பும் வேப்பம்பூக்களின்
சுவையயைத்தான்
என்பதை அனுமானிக்க
நான்
சாகவேண்டியதாயிற்று.

Wednesday, March 24, 2010

சங்கக் கவிதையின் நிழலில் ....


நோகோ யானே ? தேய்கமா காலை!
பிடியடி யன்ன சிறுவழி மெழுகி
தன்னமர் காதலி புல்மேல் வைத்த‌
இன்சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல்
உலகுபுகத் திறந்த வாயில்
பலரோ டுண்டன் மரீஇ யோனே!

‍‍‍‍....புறநானூறு..234.

திணை: பொதுவியல். துறை: கையறுநிலை

பாடியவ‌ர். வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன். வேள் எவ்வி
இக்கவிதை மரணத்தின் துயரையும் மரணத்தின் பின்னுள்ள வாழ்தலையும் நம்மனத்துள் கசியவிடும்பொழுது, பகிர்தலே வாழ்தலாய்க் கொண்ட மனிதத்துவத்தின் உன்னதமும் அதன் ஆற்றொனாத்தனிமையின் வலியும் சமூகதளத்தில் அதன் முக்கியத்துவமும் அவ் இருப்பற்றதன் வெறுமையும் பெண்ணிருப்பின் கையறு தன்மையும் ஒருங்கு நம் உள்ளத்தேபாயும் மரண நதி.

வேள் எவ்வி குறுநிலத்தலைவன். எப்போதும் தனித்து உண்ணுதல் அறியாதவன்.பலரோடே உண்பவன். உலகே புகும்படியாக எப்போதும் திறந்த வாயிலை உடையவன். அவன் இறந்துவிட்டான். அவன் மனைவி பெண் யானையின் அடியை ஒத்த இடத்தை சாணத்தால் மெழுகி புல்லைப் பரப்பி அதன்மீது உப்பில்லாத் பிண்டச்சோற்றை இட்டு இறந்த தன் கணவனுக்குப் படைக்கிறாள்( படைத்து உண்கிறாள்).தனித்து உண்ணுதல் அறியாத அவன் எப்படி உண்பான் தனியாக‌ அப்பிண்டச்சோற்றை. அவன் மனைவியின் துயரோ சொல்லிட இயலாது. இக்காட்சியை நான் தினம் பார்க்கிறேன். இதன் துயரம் மிகக்கொடிது.ஆதலால் என் வாழ்வு அழிந்து போவதாக என்கிறார் கவி. கணவனையிழந்த பெண் எப்படி வாழவேண்டும் என்ற துயரம் அதனினும் கொடிது.

வெள்ளெருக்கிலையார்: வெள்ளெருக்கிலை. இது ஒரு மூலிகைத்தாவரம். சமற்கிருத‍, ஆங்கில மோக அடிமைக்காலத்தில் நம்மவரின் மண்ணுடன் கலந்த வாழ்தலைக் காணவேண்டும்.

Thursday, March 18, 2010

நீர்க்குமிழியுடைத்து விளையாடும் காற்று

பைத்தியமாயிருப்பதே
ஃபேஷனாகி விட்டதால்
உங்களைப்போல் உடையணிந்துகொள்ளவும்
முயற்சிக்கிறேன்
இப்பொழுதெல்லாம்.

Monday, March 8, 2010

தன்னை இழக்கும் ருசி

குரூரத்தின் வன்ம விதைகளை
கருணை பொங்க‌
என்னுடல் வெளியில்
ஊடகனாய் விதைத்தாய்.
என்
கையறு வாழ்வில் உனக்கென்ன
கவலை.
நாம் சந்திக்கும் குறியிடங்களை
நீதான் தீர்மானிக்கிறாய்
எப்போதும்.
அது யந்திரோபாயமென்பதை
உணர்ந்ததில்லை யான்.
குறிப்புக்கு;
பெருமைதான் யெமக்கு அதில்.
ஒருபோதும் அல்லகுறியாவதில்லை
உனக்கு .

Monday, March 1, 2010

வதைவனம்

உன் பசப்புகளுக்கு

எனது கடல்

கட்டுண்டு மயங்கியது

ஒரு நிழலின்

அந்திப்பொழுது என்றறிந்து கொண்டது

மசமசக்கும் அறிகுறிகள்

புன்முறுவலாய் மாறுமா என்ன‌